சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் வீதி உலா; சப்பரத்தின் முன் படுத்து பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன்

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் வீதி உலாவின் போது சப்பரத்தின் முன் படுத்து பெண் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2022-03-10 20:48 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் வீதி உலாவின் போது சப்பரத்தின் முன் படுத்து பெண் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். 
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 
வீதி உலா
இதைத்தொடர்ந்து அன்று இரவு பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து அம்மன் வீதி உலா புறப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை சிக்கரசம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது. 
இதையடுத்து காலை 7 மணி அளவில் சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது வீதி வீதியாக சென்று அம்மன் அருள்பாலித்தார். இரவில் சிக்கரசம்பாளையம் புதூரில் உள்ள அம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது. 
பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன்
பின்னர் நேற்று காலை 7 மணி அளவில் சிக்கரசம்பாளையம் புதூரில் இருந்து பண்ணாரி அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள், விவசாயிகள் தேங்காய், பழம் உடைத்து அம்மனை வழிபட்டனர். இதையடுத்து அம்மன் வீதி உலா சிக்கரசம்பாளையம் புதூர் காலனிக்கு சென்றது. அம்மனை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் ரோட்டில் சப்பரத்தின் முன்பு படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். 
அப்போது சப்பரத்தை தூக்கி வந்தவர்கள் ஒவ்வொரு பெண் பக்தர்களையும் தாண்டி சென்றனர். இதைத்தொடர்ந்து வெள்ளியம்பாளையத்துக்கு அம்மனின் சப்பரம் சென்றடைந்தது.  

மேலும் செய்திகள்