பெண்ணை தாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் கைது
தொப்பூர் அருகே பெண்ணை பல நாட்களாக தொடர்ந்து தாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நல்லம்பள்ளி:-
தொப்பூர் அருகே பெண்ணை பல நாட்களாக தொடர்ந்து தாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெண் மீது தாக்குதல்
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36), லாரி டிரைவர். இவருடைய மனைவி சந்தியா (32). லாரியில் கிளீனராக பணிபுரிந்த நண்பரான வெற்றிவேல் (29) சக்திவேலின் வீட்டிற்கு வரும்போது தவறான நோக்கத்துடன் தன்னிடம் பழக முயன்றதாக சந்தியா கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சக்திவேல், வீட்டில் உள்ள அறையில் சந்தியாவை பல நாட்களாக தொடர்ந்து அடித்தும், எட்டி உதைத்து தாக்கியும் அதை செல்போனில் படம் பிடித்து உள்ளார்.
இதுதொடர்பாக கணவர் சக்திவேல் மீதும் தனக்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்த வெற்றிவேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சந்தியா புகார் அளித்தார்.
கணவர் கைது
இந்த புகாரின் பேரில் சக்திவேல், வெற்றிவேல் ஆகிய 2 பேர் மீதும் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவான 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சந்தியாவின் கணவர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெற்றிவேலை போலீசார் தேடி வருகிறார்கள்.