‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-10 20:43 GMT
நடுரோட்டில் மின் கம்பம்
கோபி பச்சைமலை செல்லும் சாலையில் நடு ரோட்டிலேயே மின்கம்பம் அமைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அந்த மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி. 


குண்டும் குழியுமான சாலை
ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியில் உள்ள சின்னமுத்து 2-வது வீதியில் ரோடு பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்து காணப்படும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், ஈரோடு.


சாலையை சீரமைக்க வேண்டும்
கோபி கிருஷ்ணன் வீதியில் இருந்து இணைப்பு சாலை ஒன்று கருப்பராயன் கோவிலுக்கு செல்கிறது. இந்த சாலையில் குடிநீர் குழாய் அமைக்க ரோடு தோண்டப்பட்டு பின்னர் மூடப்பட்டது. ஆனால் மூடப்பட்ட இடத்தில் கல் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.  

கோரிக்கை ஏற்பு
நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சி 12-வது வார்டுக்கு உள்பட்ட பெருமாள் கோவில் வீதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்றது. இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’  புகார் பெட்டி பகுதியில்  பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, பெருமாள் கோவில் வீதிக்கு பேரூராட்சி பணியாளர்கள் சென்று அங்கு தேங்கி நின்ற கழிவுநீர் செல்ல வழிவகை செய்தனர். இதுபற்றி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், எலத்தூர். 

அங்கன்வாடி மையம் புதுப்பிக்கப்படுமா?
அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த மையத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த 15 குழந்தைகள் சென்று படித்து வருகின்றனர். ஆனால் அந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது.  எனவே குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி மையத்தை புதுப்பிப்பதுடன், சுற்றிலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அந்தோணிசாமி, செம்புளிச்சாம்பாளையம்.


வீணாகும் குடிநீர்
ஈரோடு சாஸ்திரிநகர் நால்ரோடு அருகில் செல்லமுத்து தோட்டம் பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. அதிலிருந்து குடிநீர் வீணாகி சாக்கடையில் சென்று கலக்கிறது. எனவே தேவைப்படும்போது மட்டும் குடிநீரை பிடித்து கொள்ளும் வகையில் திருகு அமைத்து குழாய் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயத்திரி, சாஸ்திரிநகர்.

பாராட்டு
கோபி அக்ரகாரம். கிருஷ்ணன் வீதியில் செடி, கொடிகள், காய்ந்த வாழை மரங்கள், மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடந்தது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றி சுத்தப்படுத்தினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 
பொதுமக்கள், கோபி

மேலும் செய்திகள்