ரூ.39 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ரூ.39 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டத்தை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-10 19:59 GMT
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ரூ.39 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டத்தை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
தேர் அலங்கரிக்கும் பணிகள்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலின் முக்கிய திருவிழாக்களில், பங்குனி உத்திர திருவிழாவில் நடக்கும் ஆழித்தேரோட்டம் சிறப்புமிக்கது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. இந்த ஆண்டு ஆழித்தேரோட்ட விழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆழித்தேருடன், விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் என 4 தேர்களும் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் விமரிசையாக கொண்டாடப்படும். 
இந்த நிலையில் விநாயகர் தேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. இதனையடுத்து விநாயகருக்கு புதிய தேர் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் திட்டமிட்டு ரூ.39 லட்சம் மதிப்பில் தேர் கட்டும் பணி தொடங்கியது.
தேர் வெள்ளோட்டம்
இந்த தேர் சிம்மாசனம் வரையிலும் 18 அடி உயரம் கொண்டது. தேர் அலங்கரிப்புடன் சுமார் 40 அடி உயரத்துடன் பிரமாண்டமாக காட்சியளிக்கும். தேக்கு, இலுப்பை மரங்களை கொண்டு தேர் கட்டும் பணிகள் நடைபெற்றது. இந்த தேரில் விநாயகர், கோவில் சிற்பங்கள், பூத கணங்கள் என 250 மர சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த தேர் கட்டும் பணிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இதனையடுத்து நேற்று அதிகாலை 3.30 மணியவில் புதிய விநாயகர் தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இதனையொட்டி தேர் மாவிலை, மாலைகளால் அலங்கரித்து, வாழை மரங்கள் கட்டி வெள்ளோட்டத்திற்கு தயாரானது. 
இதைத்தொடர்ந்து திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், கோவில் செயல் அலுவலர் கவிதா ஆகியோர் தேர் சக்கரத்திற்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க விநாயகர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது.  கீழவீதி தேரடியில் இருந்து தேர் புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக வந்து மீண்டும் தேரடியை அடைந்தது. ஆழித்தேரோட்டம் விழாவில் முதன்மையாக வடம் பிடிக்கப்படும் புதிய விநாயகர் தேர் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியது.

மேலும் செய்திகள்