தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தஞ்சை வருகை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தஞ்சைக்கு நாளை (சனிக்கிழமை) வருகை தருகிறார். அவர் தஞ்சை பெரியகோவில், சரசுவதி மகால் நூலகத்துக்கும் செல்கிறார்.
தஞ்சாவூர்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தஞ்சைக்கு நாளை (சனிக்கிழமை) வருகை தருகிறார். அவர் தஞ்சை பெரியகோவில், சரசுவதி மகால் நூலகத்துக்கும் செல்கிறார்.
கவர்னர் வருகை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் சுற்றுப்பயணம் தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு 11.10 மணிக்கு திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு தஞ்சையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகிறார்.
பின்னர் அவர் மதியம் 2 மணி முதல் 2.45 மணி வரை முன்னாள் படைவீரர்களை சந்தித்து பேசுகிறார். மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு பெரியகோவில் மற்றும் சுரசுவதி மகால் நூலகத்துக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு சுற்றுலா மாளிகைக்கு வருகிறார்.
தென்னக பண்பாட்டு மையம்
இரவு அங்கு தங்கும் கவர்னர் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு வரும் அவர் மதியம் 2.30 மணிக்கு தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் கலைவிழாவில் (ஆக்டேவ் வடகிழக்கு மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா) பங்கேற்கும் அவர் பின்னர் மாலை 4.40 மணிக்கு சுற்றுலா மாளிகை வந்து இரவு தங்குகிறார்.
14-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7.45 மணிக்கு தஞ்சை சுற்றுலா மாளிகையில் இருந்து கவர்னர் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் கவர்னர் தஞ்சை வருகையையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.