ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-10 19:02 GMT
சிதம்பரம், 

 சிதம்பரம்  தச்சன்குளத்தின் கரை பகுதியில் சுமார்   50 ஆண்டுகளுக்கும் மேலாக 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. எனவே உடனே ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என கூறி வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து சிலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். 
மேலும் பல வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். இந்த நிலையில் மீதம் உள்ள 28 வீடுகளை அகற்றுவதற்காக நேற்று காலை சிதம்பரம் மண்டல துணை தாசில்தார் ராஜலிங்கம் தலைமையில் பணி மேற்பார்வையாளர் ரமேஷ், மின் பணியாளர்கள் ரமேஷ், சலீம், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, நவீன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் தச்சன்குளக்கரை பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர். 

வாக்குவாதம்

அப்போது அங்கு வசித்து வந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களுடன் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு காலஅவகாசம் வழங்குவதோடு, மாற்று இடம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நகராட்சி அதிகாரிகள் நாளைமறுநாளுக்குள் (ஞாயிற்றுக்கிழமை) ஆக்கிரமிப்புகளை நீங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நிறுத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்