சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சுமதி சாய்பிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்ட பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை குறித்த வழக்குகள், தொழிலாளர் பிரச்சினை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்குகள் ஆகியவைகளில் தீர்வு காணலாம்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய இயலாது. அதுபோல் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு ஏற்கனவே செலுத்தியுள்ள நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இதனால் வழக்கு தரப்பினர்கள் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் கால விரயம் மற்றும் பண செலவை தவிர்க்கலாம். 12-ம் தேதி நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றத்தில் சிவகங்கை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 16,581 வழக்குகளில் சமரச தீர்வு காணக்கூடிய 1,453 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தவிர நீதிமன்றத்தில் இல்லாத வழக்குகளையும் கொடுக்கலாம் இங்கு இரு தரப்பினரும் பேசி வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.