தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மத்திய மந்திரி நாராயண் ரானே ஐகோர்ட்டில் மனு
திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மத்திய மந்திாி நாராயண் ரானே ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மும்பை,
திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மத்திய மந்திாி நாராயண் ரானே ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மரணம் குறித்து அவதூறு
நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் 2020-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் உயிரிழந்த 6 நாளில் சுஷாந்த் சிங் வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி மத்திய மந்திரி நாராயண் ரானே பத்திரிகையாளரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் திஷா சாலியன் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக திஷா சாலியனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மால்வாணி போலீசார் நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ்ரானே எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2 பேரையும் கைது செய்ய மும்பை கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
ஐகோர்ட்டில் மனு
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் மால்வாணி போலீசார் நாராயண் ரானே, நிதேஷ் ரானேவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். 9 மணி நேர விசாரணைக்கு பிறகே அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரியும், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக்கோரியும் மும்பை ஐகோர்ட்டில் நாராயண் ரானே, நிதேஷ் ரானே மனுதாக்கல் செய்து உள்ளனர். அதில் தங்கள் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.