தனுஷ்கோடி கடற்கரையில் கண்காணிப்பு மையம்
தனுஷ்கோடி கடற்கரையில் கண்காணிப்பு மையம் கட்டும் பணி நடந்து வருகிறது
ராமேசுவரம்,
கடல்வாழ் உயிரினங்கள் கடத்தலை தடுப்பதற்காக தனுஷ்கோடி கடற்கரையில் புதிதாக வனத்துறை கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கண்காணிப்பு மையம்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின், ஆமை, கடல் குதிரை, கடல்பசு உள்ளிட்ட 3 ஆயிரத்து 600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் ஆமைகள் அதிக அளவில் உள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் இந்த தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து ஏராளமான ஆமைகள் முட்டையிடுவதற்காக ஊர்ந்தபடி கடற்கரை பகுதிக்கு வந்து மணலில் முட்டைகளை இட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும்.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வனத்துறையினர் இரவு பகலாக தங்கியிருந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக எம்.ஆர்.சத்திரம் கடற்கரை அருகே வனத்துறை கண்காணிப்பு மையம் ஒன்று புதிதாக கட்டும் பணி கடந்த ஒரு வாரமாகவே நடைபெற்று வருகின்றது. இந்த பணியானது இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக முடிவடைந்து விடும் என்று கூறப்படுகின்றது.
கடத்தலை தடுக்க
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழகத்தில் உள்ள மிக முக்கிய கடற்கரை பகுதிகளில் தனுஷ்கோடியும் ஒன்றாகும். தனுஷ்கோடி கடற்கரை பகுதி வழியாக கடல்வாழ் உயிரினங்கள் கடத்துவதை தடுப்பதற்காகவும், தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் பிடிப்பதை தடுப்பதற்காகவும் வனத்துறை கண்காணிப்பு மையம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும்.
அதன் பின்னர் இந்த தனுஷ்கோடி கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு இரவு, பகலாக வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குறிப்பாக தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் முட்டையிட வரும் ஆமைகளை பொதுமக்கள் யாரும் தொந்தரவு செய்யாமல் இருப்பதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் இந்த கண்காணிப்பு மையத்திலிருந்து இரவு முதல் அதிகாலை வரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.