பாறைக்குழி குப்பையில் திடீர் தீ

போயம்பாளையம் அருகே பாறைக்குழி குப்பையில் ஏற்பட்ட திடீர் தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

Update: 2022-03-10 18:00 GMT
அனுப்பர்பாளையம்
போயம்பாளையம் அருகே பாறைக்குழி குப்பையில் ஏற்பட்ட திடீர் தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
 திடீர் தீ
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்திநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழி உள்ளது. அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட்டதால் பாறைக்குழி நிரம்பியது. இதையடுத்து அங்கு குப்பை கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனாலும் பாறைக்குழி மூடப்படாததால் மேல் பகுதியில் குப்பைகள் நிரம்பியிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் அங்கு குப்பையில் இருந்து கரும்புகை வெளியானது. நேரம் செல்ல செல்ல குப்பை தீப்பிடித்து, தீ மளமளவென எரியத் தொடங்கியது. 
இதுகுறித்து மாலை 6.30 மணிக்கு திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
 போராடி அணைப்பு 
இதையடுத்து மாநகராட்சி லாரி மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி நேற்றிரவு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்