தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
தொழிலாளி கொலை
ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). இவர் ரெகுநாதபுரம் அருகே உள்ள ஆர்.மேலூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் அருகில் மதுகுடிக்க வருபவர்களுக்கு டம்ளர் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மதுக்கடையில் பார் வசதி இல்லாததால் கிருஷ்ணனிடம் டம்ளர் உள்ளிட்டவைகளை மது பிரியர்கள் வாங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி வழக்கம்போல கிருஷ்ணன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தெற்கூரை சேர்ந்த துரைராஜ் மகன் போஸ் என்ற கட்டைபோஸ் (36) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் குடிபோதையில் தவறி விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்ததை கண்ட கிருஷ்ணன் அங்கு சென்று அறிவுரை கூறி உதவியுள்ளார். இவர்களுக்குள் ஏற்கனவே உறவினர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த போஸ் தான் வைத்திருந்த மதுபாட்டில் மற்றும் கத்தியால் கிருஷ்ணனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டை போஸ் என்பவரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் இந்த கொலை வழக்கில் கட்டைபோசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.