பெண் போலீசிடம் பறிக்கப்பட்ட வாக்கிடாக்கி, 18 நாட்களுக்கு பிறகு மீட்பு

பெண் போலீசிடம் பறிக்கப்பட்ட வாக்கிடாக்கி, 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது

Update: 2022-03-10 14:57 GMT
அரியாங்குப்பம், மார்ச்.10-
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை போலீசராக ஜீவிதா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் உள்ள சிக்னலில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு கார் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. இதை பார்த்த ஜீவிதா, அங்கிருந்தவரின் உதவியுடன் விபத்து ஏற்படுத்திய காரை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தார். அப்போது     கார்     டிரைவர் ஜீவிதாவை தாக்கிவிட்டு,   அவர்  வைத்திருந்த  வாக்கி டாக்கியை பறித்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊர்க்காவல் படை போலீஸ் ஜீவிதாவை தாக்கிய டிரைவர் ஹாஜியை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.   ஆனால்  வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்படவில்லை.
இதையடுத்து ஹாஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அவரை கோர்ட்டு அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தபோது, முள்ளோடை நுழைவாயிலில் உள்ள புதர் பகுதியில் வாக்கி டாக்கியை வீசியதாக கூறினார். அதன்பேரில் தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் போலீசார் முள்ளோடை பகுதியில் வாக்கி டாக்கியை தீவிரமாக தேடினர். நீண்ட நேர தேடலுக்கு பிறகு வாக்கிடாக்கி கண்டெடுக்கப்பட்டது. அதனை போலீஸ் உயர்அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர். 18 நாட்களுக்கு பிறகு வாங்கி டாக்கி கிடைத்ததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
_____

மேலும் செய்திகள்