தியேட்டர் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெரியகுளத்தில் நடிகர் சூர்யா திரைப்படம் வெளியிட்ட தியேட்டர் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்:
நடிகர் சூர்யா நடித்து வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சி இடம்பெற்றதாக கூறி அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்தது. ஆனால் சூர்யா மன்னிப்பு கேட்காததால், அவர் நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் தியேட்டர்களில் இன்று வெளியானது. இதனால் சூர்யாவின் வீடு மற்றும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த திரைப்படம் பெரியகுளத்தில் உள்ள ஒரு தியேட்டரிலும் இன்று வெளியானது. அந்த தியேட்டர் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை அந்த தியேட்டர் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பா.ம.க. கவுன்சிலர் குமரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது படம் வெளியாவதை தடை செய்வோம் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நகர செயலாளர் முத்தையா உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 30 நிமிடம் தாமதமாக படம் திரையிடப்பட்டது.