நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:-
கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பு அமைப்பான தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பொன்.நக்கீரன் தலைமை தாங்கினார். மண்டல பொருளாளர் பக்கிரிசாமி, துணைத்தலைவர்கள் பாஸ்கரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் 10,000 முதல் 15,000 வரை தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய வேண்டும்.
பதவி உயர்வு
காலதாமதமாக இயக்கம் செய்யப்படுவதால் ஏற்படும் இழப்புக்கு கொள்முதல் பணியாளர்களை பொறுப்பாக்க கூடாது. நவீன அரிசி ஆலையில் பணியாற்றி வரும் உதவி ஆபரேட்டர்களை, ஆபரேட்டர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
நிரந்தர பணி நிமித்தமாக கொள்முதல் பணியாளர்களுக்கான தகுதி பட்டியல் தயாரிக்க தேவைப்படும் சான்றிதழ்களை காலதாமதமின்றி உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை செயலாளர்கள் வேல்முருகன், வாசுதேவன், அன்பழகன், ராஜ்மோகன், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.