திருமணத்திற்கு வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு
உப்பிலியபுரம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
உப்பிலியபுரம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள ஒக்கரை கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 58). விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு அருகே புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு சென்று அங்கேயே படுத்து தூங்கினர். அங்கிருந்து நேற்று காலை வீட்டுக்கு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், சங்கிலி, தோடு, மோதிரம், ஜிமிக்கி, தங்க நாணயம், ஆரம் உள்பட 15 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இந்த நகைகளை மகளின் திருமணத்திற்காக ராஜூ வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.