தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
தர்மபுரி 4 ரோடு பகுதியில் இருந்து பழைய தர்மபுரி பகுதி வரை உள்ள - கிருஷ்ணகிரி சாலையில் மைய தடுப்பு சுவர் பகுதியில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் ராமாக்காள் ஏரி முதல் பழைய தர்மபுரி வரை அமைக்கப்பட்டிருக்கும் மின் விளக்குகள் இரவு நேரங்களில் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் முழுமையாக எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேஷ்குமார், பழைய தர்மபுரி.
வர்ணம் பூசப்பட வேண்டிய வேகத்தடைகள்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி ரவுண்டானா, பெங்களூரு ரோடு, சென்னை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை நிற வர்ணம் பூசாமல் இந்த வேகத்தடைகள் உள்ளன. வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.
அடிப்படை வசதிகள் வேண்டும்
சேலம் நரசிங்கபுரம் 15-வது வார்டு கலைஞர் காலனியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அந்த தெருவில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் குடிநீர் தொட்டி உடைந்து சாக்கடையுடன் குடிநீரும் கலந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் மண் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும்.
-பாரதி, நரசிங்கபுரம், சேலம்.
ஆக்கிரமிக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடம்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்த சூரியகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் நிழற்கூடம் உள்ளது. தற்போது அந்த இடத்தில் சிலர் வைக்கோல் வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பயணிகளின் நிழற்கூடம் சுகாதாரமற்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-மணி, சூரியகவுண்டம்பாளையம், நாமக்கல்.
பயணிகள் நிழற்கூடம் வேண்டும்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இருபுறமும் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். தற்போது வெயில் காலம் வரவிருக்கும் நிலையில் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் வெயில் நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த பகுதியில் இருபுறமும் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
-பாரதிதாசன், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.
புதிய பள்ளிக்கட்டிடம் கட்டப்படுமா?
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் பெரியபட்டி காட்டுவளவு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த ஆண்டு அதிகாரிகளின் உத்தரவின்பேரில் பழுதடைந்த பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பதிலாக புதிய பள்ளிக்கட்டிடம் இன்றுவரை கட்டப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--ஊாமக்கள், காட்டுவளவு, சேலம்.
பஸ்கள் வருவதில்லை
மேட்டூர்- தர்மபுரியில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையம் வரும் பஸ்கள் மாலை நேரங்களில் குரங்குச்சாவடியில் இருந்து பாலத்தின் மீது செல்கிறது. 5 ரோடு வழியாக வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் 5 ரோடு வழியாக பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.