தொழிற்சாலைகளில் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும்
புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
சேலம்:-
புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் சேலத்தில் தனியார் ஜவ்வரிசி ஆலை, மேட்டூர் அணை, அனல் மின் நிலையத்தில் பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்துவிட்டு மாலையில் ஏற்காட்டிற்கு சென்றனர்.
சட்டமன்ற பொது நிறுவனங்களின் குழு தலைவர் ராஜா எம்.எல்.ஏ தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, சேகர், நாகைமாலி, நிவேதா எம்.முருகன், பாலாஜி, ரூபி.ஆர்.மனோகரன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அர்ப்பணிப்பு உணர்வுடன்
கூட்டத்தில் குழு தலைவர் ராஜா பேசும்போது, சிறந்த முதல்-அமைச்சராக வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினுக்கு நோக்கம் அல்ல. இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் ஆகும். அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அதிகாரிகள் தான். எனவே, அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி இந்த அரசுக்கு நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும் என்றார்.
குழு தலைவர் பேட்டி
ஆய்வு கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள ஜவ்வரிசி ஆலையின் சுற்றுச்சூழல் தன்மை குறித்தும், மேட்டூர் அனல் மின் நிலையம், மேட்டூர் அணை, சுற்றுலா தலமான ஏற்காட்டில் உள்ள ஏரி மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கள ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அந்த கோரிக்கைகளை செயல்படுத்துவதற்கு தொடர்புடைய துறைகளான சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், மேட்டூர் அனல் மின் நிலையம் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்களிடம் இருந்து பதில்களை பெற்றுள்ளோம். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
புதிய தொழில்நுட்பங்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கழிவு நீரை சுத்திகரிப்பு செய்திட மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கண்காணித்து உறுதிப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
ஏற்காட்டில் ஆய்வு
முன்னதாக ஏற்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வங்கி கடனுதவி பெற்ற பயனாளிகளிடம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சித்ரா, அருள், சதாசிவம், பொது நிறுவனங்கள் குழு சிறப்பு பணி அலுவலர் ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.