வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த மதுரை கலெக்டர்

சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு சைக்கிளில் மதுரை கலெக்டர் வந்தார்.

Update: 2022-03-09 20:33 GMT
மதுரை, 

சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் விழிப்புணர்வாக அரசு அலுவலர்கள் புதன்கிழமை தோறும் அலுவலகத்திற்கு சைக்கிள் அல்லது பொது போக்குவரத்து மூலம் வர வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கலெக்டர் அனிஷ் சேகர், நேற்று ரிசர்வ்லைனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார்.
அவர் தனது இல்லத்தில் இருந்து பாரதி உலா ரோடு, ரேஸ்கோர்ஸ், உலக தமிழ்சங்கம், காந்தி மியூசியம் வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் கலெக்டரின் உதவியாளர் சுரேஷ், டபேதார் சீனிவாசன் மற்றும் போலீஸ் பாதுகாவலர் ஆகியோரும் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் கலெக்டர் அனிஷ்சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காற்றுமாசு சுகாதாரத்திற்கு பெரும் ஆபத்து என்பதை உணர்ந்து தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் ”மீண்டும் மஞ்சள் பை” - என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத துணிப்பைகளை பயன்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள்.
மேலும், வாகன எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் கீழ் பணிபுரியும் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாரத்திற்கு ஒரு நாள் புதன்கிழமைதோறும் தங்களது வாகனங்களைத் தவிர்த்து பொதுப்போக்குவரத்து, சைக்கிள், மின் சைக்கிள் ஆகியவற்றில் அலுவலகத்திற்கு வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நானும் எனது முகாம் அலுவலகத்தில் (இல்லம்) இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தேன். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்போக்குவரத்து, சைக்கிள், மின் சைக்கிள் ஆகியவற்றை பயன்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்