கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்

Update: 2022-03-09 20:28 GMT
பெங்களூரு:
பெங்களூருவில் போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் 2 பேரும் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலிபர் கொலை

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி அருகே மாஸ்கி ரோடு பகுதியில் வசித்து வந்தவர் சேக் முகமது. இவர், பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். சேக் முகமது ஒரு இளம்பெண்ணை சினிமாவுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சேக் முகமது, அவரது கூட்டாளிகளுக்கும், சிவாஜிநகரை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சேக் முகமது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சிவாஜிநகரை சேர்ந்த ஒரு கும்பலை சேர்ந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், கத்தியால் குத்தி சேக் முகமதுவை கொலை செய்தார்கள். இதுகுறித்து புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட கொலையாளிகளை தேடிவந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெகடர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் பையப்பனஹள்ளி மற்றும் கல்லஹள்ளி இடையே கொலையாளிகள் பதுங்கி இருப்பது பற்றி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள், போலீஸ்காரர் மீது தங்களிடம் இருந்த ஆயுதத்தால் தாக்கினார்கள். இதில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சரண் அடைந்து விடும்படி 2 பேரையும் எச்சரித்தார். ஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்து விட்டு தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர்களான ஆனந்த், ரூமான் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் 2 நபர்களையும் நோக்கி சுட்டார்கள். இதில், 2 பேரின் காலிலும் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார்கள். உடனே அவர்களை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தார்கள்.

2 பேரும் ரவுடிகள்

பின்னர் போலீஸ்காரர் மற்றும் 2 நபா்கள் சிகிச்சைக்காக பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், குண்டு காயம் அடைந்தவர்கள் பெயர் சையத் மோகின் மற்றும் அத்தான் கான் என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் ரவுடிகள் ஆவார்கள். அவர்களது பெயர் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இளம்பெண் விவகாரத்தில் சேக் முகமதுவுக்கும், சையத் மோகினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், இந்த தகராறில் கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது.

கைதான ரவுடிகள் சையத் மோகின், அத்தான் கான் கொடுத்த தகவலின் பேரில், சேக் முகமது கொலையில் தொடர்புடைய கூட்டாளிகள் 3 பேரையும் புலிகேசிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 5 பேர் மீதும் புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்