கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கடும் வாக்குவாதம்
பட்ஜெட் மீது குமாரசாமி பேசும்போது சட்டசபையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது
பெங்களூரு: பட்ஜெட் மீது குமாரசாமி பேசும்போது சட்டசபையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த கால பட்ஜெட்
கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீது ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி பேசி கொண்டிருந்தார். அப்போது சித்தராமையா பேசிய பேச்சின் சாராம்சங்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர் குறுக்கிட்டு, ‘‘குமாரசாமி பேசுவதற்கு எனது ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர் முதல்-மந்திரி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீது பேசுகிறாரா? அல்லது சித்தராமையா பேசிய பேச்சு அடிப்படையில் பேசுகிறாரா? என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் சித்தராமையா பேச்சின் அம்சங்களையே அவர் குறிப்பிட்டு பேசுகிறார்’’ என்றார்.
அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி எழுந்து, ‘‘நேற்று (நேற்று முன்தினம்) சித்தராமையா பேசும்போதும், தான் முன்பு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்தே அதிகமாக பேசினார். அப்போது எனக்கு, அவர் பட்ஜெட் மீது பேசுகிறாரா? அல்லது அவர் தாக்கல் செய்த பட்ஜெட் மீது பேசுகிறாரா? என்று சந்தேகமாக இருந்தது. பட்ஜெட் மீதான விவாதத்தில் கடந்த கால பட்ஜெட் குறித்து பேசியதை நான் முன்பு எப்போதும் பார்த்தது இல்லை’’ என்றார்.
நாங்கள் கவனித்தோம்
அப்போது யு.டி.காதர் மீண்டும் குறுக்கிட்டு, ‘‘நான் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவரை நோக்கி தான் கேள்வி எழுப்பினேன். அதற்கு நீங்கள்(மாதுசாமி) எதற்காக பதிலளிக்கிறீர்கள். நீங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியை நியாயப்படுத்தி பேசுகிறீர்கள். அவர்கள் உங்களை(பா.ஜனதா) நியாயப்படுத்தி பேசுகிறார்கள். இவ்வாறான நிலையில் பா.ஜனதாவின் ‘பி-டீம்’ என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது’’ என்றார்.
அதற்கு ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து நின்று பேசினர்.
இரு கட்சிகளின் உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று பேசியதால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டு அமளி உண்டானது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் சிறிது பரபரப்பு நிலவியது. அதைத்தொடர்ந்து குமாரசாமி மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார். அவர், ‘‘எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பட்ஜெட் மீது 2 நாட்கள் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை நாங்கள் கவனித்தோம். அவர் அரசியல் பேசவில்லையா?. ஆர்.எஸ்.எஸ். பட்ஜெட் என்று கூறினார்’’ என்றார்.
எனது உரிமை
அதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் எழுப்பினர். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அப்போது மீண்டும் பேசிய குமாரசாமி, ‘‘நான் என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதை உங்களிடம் இருந்து கற்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு பேசுவது எனது உரிமை’’ என்றார்.