மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வட்டார வளமையம் வாரியாக 9 நாள் மருத்துவ முகாம் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2022-03-09 19:59 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வட்டார வளமையம் வாரியாக 9 நாள் மருத்துவ முகாம் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. 
இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ முகாம்கள்
குமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முறையான மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும், அடையாள அட்டைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்புத் தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பயனாளிகளை கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வட்டார வள மையம் வாரியாக மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. 
அதன்படி, ராஜாக்கமங்கலம் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 22-ந் தேதியும், மணவாளக்குறிச்சியில் உள்ள கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 23-ந் தேதியும், முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 24-ந் தேதியும், இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 25-ந் தேதியும், திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 26-ந் தேதியும், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 28-ந் தேதியும், கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29-ந் தேதியும், மேல்புறம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 30-ந் தேதியும், தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 31-ந் தேதியும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
பயன்பெற வேண்டுகோள்
இந்த மருத்துவ முகாம்களை சுகாதாரத் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து நடத்த உள்ளன. இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்