குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-03-09 19:41 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முதல் நகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், பொறியாளர் மகாராஜன், மேலாளர் விஜயலட்சுமி, துணைத் தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகளும், அதற்கு நகராட்சி தலைவர் அளித்த பதில்களும் வருமாறு:- ரமேஷ் (தி.மு.க.) கூறுகையில். சிதம்பரத்தில் புதிய பஸ் நிலையம்  அமைக்க வேண்டும். 
ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க.) கூறுகையில், பொதுமக்கள் நலன் கருதி சிதம்பரம் மேலவீதியில் இருக்கும் காய்கறி மார்க்கெட்டை, உழவர் சந்தைக்கு மாற்றவேண்டும்.
தில்லை. ஆர்.மக்கீன் (காங்கிரஸ்) கூறுகையில், அங்காளம்மன் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதனை உடனே தூர்வார வேண்டும்.

கூட்டுகுடிநீர் திட்டம்

வெங்கடேசன் (தி.மு.க.) கூறுகையில்.. சிதம்பரம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக  இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும். 
அப்பு சந்திரசேகர் (தி.மு.க.) கூறுகையில், கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 
 சி.க.ராஜன் (தி.மு.க.)கூறுகையில், எங்கள் வார்டில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் விரைவில் செய்து கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து கூட்டத்தில், நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதையும் சரி செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் பேசுகையில், உங்களது  கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.  கூட்டத்தில் கவுன்சிலர் ஜெயசித்ரா பாலசுப் பி்ரமணியன்,  ஏ.ஆர்.சி.மணிகண்டன், சரவணன், தஸ்லீமா, அறிவழகன்,  சித்ரா, சுதாகர்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்