ஆணா? பெண்ணா? என்று பார்த்து கருக்கலைப்பு செய்த போலி டாக்டர்

திருப்பத்தூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் 5-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய உதவியாளரும் சிக்கினார்.

Update: 2022-03-09 19:22 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்த  போலி டாக்டர் 5-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய உதவியாளரும் சிக்கினார்.

போலி டாக்டர்

திருப்பத்தூர் சாமநகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர் பி.எஸ்.சி மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்வது குறித்து டிப்ளமோ படித்துவிட்டு கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை தெரிவித்து வந்துள்ளார். கருவில் இருப்பது பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

கதிரம்பட்டி, மகிமைகாரன் தோட்டம் என்கிற காட்டுப் பகுதியில் ஒரு குடிசையில் சுமார் 10 பெண்களை அமரவைத்து அவர்களுடைய கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பது ஸ்கேன் மூலமாக கண்டறியப்பட்டு வருவதாக தகவலறிந்த சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக புலனாய்வுப் பிரிவு துணை சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையில், கமலக்கண்ணன், குழுவினர் அதனை கண்காணித்தனர். 

5-வது முறையாக கைது

அப்போது,  போலி டாக்டர் சுகுமார் மற்றும் செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் ஆகிய 2 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அங்கு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 10 தம்பதியினர் இருந்தனர். 

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனக் கண்டறிய ஒருவருக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சுகுமார் பெற்றுள்ளார்.
குண்டர் சட்டத்தில் கைதானவர்

போலி டாக்டர் சுகுமார் ஏற்கனவே பெண்ணின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என பார்த்ததாக 4 முறை கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர். குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 5-வது முறையாக கைதாகி இருக்கிறார். 

புரோக்கர்கள் மூலம்...

தினமும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று கர்ப்பிணிகளை புரோக்கர் மூலம் வரவழைத்து ஆணா? பெண்ணா? என்று ஸ்கேன் செய்து பார்த்து கூறுவார். இதன் மூலம் தினமும் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

போலி டாக்டர் சுகுமாரிடம் இருந்து ஸ்கேன் கருவி மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் குமரவேல் கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டர் சுகுமார் மற்றும் உதவியாளர் வேடியப்பன் ஆகிய 2 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 இவரது மகள் மற்றும் மகன் எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்