காதலி பேசாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
மார்த்தாண்டம் அருகே காதலி பேசாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே காதலி பேசாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லேப் டெக்னீசியன்
மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அஜித் (வயது 24). இவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.
அஜித் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தனது காதலியை அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாகவும் காதலை வளர்த்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் அஜித்தின் காதலி சமீபகாலமாக அவருடன் பேசவில்லை.
காதலியை சந்தித்து பேச அஜித் பல முயற்சிகளை மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் காதலி பேசாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அஜித் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள உதியன்குளம் பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அஜித் பரிதாபமாக இறந்தார்.
சோகம்
பின்னர் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலி பேசாததால் விரக்தியில் லேப் டெக்னீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.