திருமயம் அருகே மணல் கடத்தி வந்த லாரியை தடுத்த வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் 2 பேருக்கு வலைவீச்சு

திருமயம் அருகே மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்திய வருவாய் ஆய்வாளரை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-09 18:38 GMT
திருமயம்:
திருமயம் வருவாய் கிராமத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஆர்ச் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை மறித்து விசாரணை செய்தார். விசாரணையில் 3 யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்ய முயற்சி செய்தார். அப்போது லாரி டிரைவருக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதில் லாரி டிரைவர், வருவாய் ஆய்வாளரை தாக்கி அவரது செல்போனையும் உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில்குமார் திருமயம் போலீஸ் நிலையத்தில் லாரி உரிமையாளர் கே.புதுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்கிற செல்வம் மற்றும் லாரி டிரைவர் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்