மாணவர்களின் சைக்கிள்களுக்கு பாதுகாப்பு கட்டிடம் கட்ட வேண்டும்

கோட்டூர் பகுதியில் மாணவர்களின் சைக்கிள்களுக்கு பாதுகாப்பு கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-09 18:21 GMT
கோட்டூர்;
கோட்டூர் பகுதியில் மாணவர்களின் சைக்கிள்களுக்கு பாதுகாப்பு கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கிராமப்புற மாணவர்கள்
தமிழக அரசு கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது. மேலும் 8, 9, 10, 12-ம் வகுப்பு மாணவர்களும் தங்கள் சொந்த சைக்கிளில் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக மாணவிகள் அதிக அளவில் சைக்கிளை பயன்படுத்தி வருகிறார்கள். மாணவர்கள் பள்ளிகளுக்கு சைக்கிளில்குறித்த நேரத்தில் வருவதும் பள்ளி முடிந்த உடன்  காலத்தோடு வீட்டுக்கு செல்வதையும் பெற்றோர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
மழை- வெயில்
பஸ் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு சைக்கிள் மிகவும் உபயோகமாக உள்ளது. கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, களப்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, புத்தகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, வாட்டர் உயர்நிலைப்பள்ளி, பாலையூர் உயர்நிலைப்பள்ளி, தென்பரை உயர்நிலைப்பள்ளி, மழவராயநல்லூர் உயர்நிலைப்பள்ளி, மேலப்பனையூர் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட கோட்டூர் பகுதிகளில் 15- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வரும் சைக்கிள்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதி இன்றி வெட்ட வெளியில் வெயிலில் காய்ந்து மழையில் நனைகிறது. 
பாதுகாப்பு கட்டிடம்
இதனால் சைக்கிள்கள் துருப்பிடித்து குறுகிய காலத்தில் வீணாகி விடுகிறது. மேலும் அடிக்கடி சைக்கிள்களில் பழுது நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  எனவே பள்ளிகளுக்கு மாணவர்கள் கொண்டு வரும் சைக்கிள்களுக்கு உரிய பாதுகாப்பு கட்டிடம் அமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்