திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா-10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவையொட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.

Update: 2022-03-09 18:18 GMT
எலச்சிப்பாளையம்:
மாசி குண்டம் திருவிழா
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடைபெறும். அதன்படி மாசி குண்டம் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் ஓங்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. மேலும் மகா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தீ மிதித்த பக்தர்கள்
இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து காளியம்மனை வழிபட்டனர். 
ஆண், பெண் பக்தர்கள் சிலர் தங்களது குழந்தைகளுடன் தீ மிதித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். சில பக்தர்கள் பக்தி பரவசத்தால் குண்டத்தில் தவறி விழுந்து, காயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விழாவையொட்டி ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்