கடும் நிதி நெருக்கடியில் திருச்செங்கோடு நகராட்சி; ரூ.6 கோடி வரியை செலுத்தாவிட்டால் நடவடிக்கை-ஆணையாளர் கணேசன் எச்சரிக்கை

கடும் நிதி நெருக்கடியில் திருச்செங்கோடு நகராட்சி உள்ளதால், நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர் வரியான ரூ.6 கோடியை செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் கணேசன் எச்சரித்துள்ளார்.

Update: 2022-03-09 18:17 GMT
எலச்சிப்பாளையம்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரூ.6 கோடி வரி நிலுவை
திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சொத்து வரி ரூ.4 கோடியும், குடிநீர் வரி ரூ.2 கோடியும் நிலுவையில் உள்ளது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை குத்தகைக்கு எடுத்த சிலர் நீண்ட காலமாக அதற்குரிய வாடகையை செலுத்தாமல் உள்ளனர். அதன்படி ரூ.2 கோடி கடை வாடகை பாக்கி உள்ளது.
இதனால் நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த நிதி ஆண்டு முடிவடைய இன்னும் 21 நாட்களே உள்ளன. எனவே பொதுமக்கள் நிலுவையில் உள்ள வரிகளை நகராட்சியில் செலுத்தி, அதற்கான ரசீதினை பெற்று கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த தவறினால் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படும். வரிகளை செலுத்தாத வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை செய்யப்படும்.
இதேபோல் கடை வாடகை செலுத்தாத கடை பூட்டி சீல் வைக்கப்பட்டு, மறு ஏலம் விடப்படும். கடைகள் உள் ஏலம் விடப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நகராட்சி ஆணையாளர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்