பஞ்சாயத்து தலைவர் மகன் பிணம் தோண்டி எடுப்பு நாகர்கோவில் கோர்ட்டில் 2 பேர் சரண்

கொன்று புதைக்கப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மகன் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக தேடப்பட்ட 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2022-03-09 18:17 GMT
நாகர்கோவில்:
கொன்று புதைக்கப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மகன் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக தேடப்பட்ட 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சட்டக்கல்லூரி மாணவர்
நாகர்கோவில் சீயோன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 56). இவர் குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அயக்கோடு பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார்.
இவருடைய மகன் லிபின் ராஜா (23), ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4-ந் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் லிபின் ராஜா காணாமல் போனதாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.  
உடல் பிரேத பரிசோதனை
இந்தநிலையில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடல் நெல்லை மாவட்டம் பழவூர் தேசிய நெடுஞ்சாலை அருகே ஓடை மண்ணில் புதைக்கப்பட்டதாகவும்         கடந்த       7-ந் தேதி காலை தகவல் வெளியானது. இதுபற்றி உடனடியாக பழவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓடை மண்ணை தோண்டி எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடலை தோண்டி எடுக்கும் பணி 2 நாட்களாக நடைபெறவில்லை. இதனால் லிபின் ராஜா உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று காலையில் ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லிபின் ராஜா உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிரசன்னா தலைமையிலான குழுவினர் அங்கேயே உடலை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து லிபின் ராஜா உடல் அவரது தந்தை செல்லப்பனிடம்  ஒப்படைக்கப்பட்டது. லிபின் ராஜா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கோர்ட்டில் சரண்
இதற்கிடையே லிபின் ராஜா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக புதுக்குடியிருப்பை சேர்ந்த எபின் (27), ஸ்டீபன் ராஜ் (26) ஆகிய 2 பேர் நாகர்கோவிலில் உள்ள 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வாஞ்சிநாதன் முன் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை 14-ந் தேதி வரை காவலில் வைக்கவும், வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தவும் மாஜிஸ்திரேட்டு வாஞ்சிநாதன் உத்தரவிட்டார்.
  அதன்படி 2 பேரும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். லிபின்ராஜா கொலை நடந்த பிறகு எபின், ஸ்டீபன் ராஜ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்தனர்.இந்தநிலையில் இருவரும் கோர்ட்டில் சரண் அடைந்தது தெரியவந்தது.
அதே சமயத்தில் லிபின்ராஜா கொலை வழக்கில் பல்வேறு தகவல்கள் இன்னும் வெளி வராமல் இருப்பதால் சரண் அடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
==============

மேலும் செய்திகள்