வி.கைகாட்டி-அரியலூர் சாலையில் பள்ளி மாணவர்கள் மறியல்
பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்லாததால் அதிருப்தி அடைந்த பள்ளி மாணவர்கள் வி.கைகாட்டி-அரியலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி,
அரசு பள்ளி மாணவர்கள்
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், சின்னநாகலூர், புள்ளிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள மாதிரி பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பெரியநாகலூர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை. ஒருசில பஸ்கள் 500 மீட்டர் தூரத்தில் தள்ளி நிறுத்துவதால் அந்த பஸ்சில் இடம் பிடிக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் தள்ளு, முள்ளு ஏற்படுகிறது. இதனால் ஒருசில மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடை கின்றனர்.
சாலை மறியல்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பள்ளி மாணவர்கள் புத்தக பையுடன் வி.கைகாட்டி-அரியலூர் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பள்ளிக்கு செல்ல முடியாத நிலை...
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், பெரியநாகலூர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் நாங்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாததால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். சில சமயங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஓடி சென்று பஸ் ஏறும் போது தவறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது என்றனர்.
இதனைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதில், சமாதானம் அடைந்த பள்ளி மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.