தர்மபுரி மாவட்டத்தில் 68 நாட்களில் 157 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 68 நாட்களி 157 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கூறினார்.

Update: 2022-03-09 17:44 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 68 நாட்களி  157 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கூறினார்.
குழந்தை திருமணங்கள்
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தின விழா தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தது. இந்த விழாக்களில் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கலந்து கொண்டு பெண் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் திருமணங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடர் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 68 நாட்களில் என 157 குழந்தை திருமணங்கள் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
34 வழக்குகள் பதிவு
இதேபோல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடத்தியது தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குழந்தை திருமணத்திற்கு உள்ளாகும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நலம், மனநலம் பாதிப்புகள், குழந்தை திருமணங்களை நடத்துவோருக்கு தண்டனைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்