விவசாயியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவர் பலி
கலசபாக்கம் அருகே முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவரும், காப்பாற்ற வந்தவரும் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவரும், காப்பாற்ற வந்தவரும் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 26). விவசாயி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (45) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சரண்ராஜ் அவரது நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை, முருகேசன் என்பவருடைய நிலத்தின் வழியாக செல்லும் மின்சார கம்பியில் வயரை மாட்டி அதை ஒரு கம்பியில் கட்டி தூங்கிக்கொண்டிருந்த சரண்ராஜ் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதற்காக சரண்ராஜின் இடது கண்ணில் மின்சார வயரை கட்டியிருந்த கம்பியால் குத்தியபோது சரண்ராஜ் அலறி அடித்து எழுந்து ஏழுமலையை தள்ளிவிட்டு விட்டு சத்தம் போட்டபடியே மாட்டு கொட்டகையில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்துவிட்டார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்த ரேணுகோபால் (33) என்பவர் ஓடிவந்தபோது ஏழுமலை கையில் வைத்திருந்த மின்சார வயரை இருட்டில் கவனிக்காமல் பிடித்துள்ளார்.
2 பேர் பலி
அப்போது ஏழுமலை மற்றும் ரேணுகோபால் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.படுகாயம் அடைந்த சரண்ராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்ய முயற்சி செய்தவரும், காப்பாற்ற வந்த வாலிபரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.