உக்ரைன் நாட்டில் இருந்து மேலும் 10 மருத்துவ மாணவர்கள் வேலூருக்கு வருகை
உக்ரைன் நாட்டில் இருந்து மேலும் 10 மருத்துவ மாணவர்கள் வேலூருக்கு வந்தனர்.
வேலூர்
உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் பயின்று வந்தனர். ரஷியா கடந்த மாதம் 24-ந் தேதி திடீரென உக்ரைன் நாட்டின் மீது போர்தெடுத்தது. 14 நாட்களாக தரை மற்றும் வான்வழியாக ரஷிய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது குண்டு வீசி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளாக ருமேனியா, ஹங்கேரி, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகிறார்கள். உக்ரைனில் படிக்கும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மத்திய அரசு சிறப்பு விமானம் மூலம் மீட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மருத்துவ மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தார்கள். அவர்களில் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த தீபா, ஜனனீ, பிரம்மபுரத்தை சேர்ந்த பவ்யஸ்ரீ, கே.வி.குப்பம் குறிஞ்சிநகரை சேர்ந்த வேந்தன், ஒடுகத்தூரை அடுத்த ஆசனம்பட்டை சேர்ந்த ராகவன் ஆகிய 5 பேரும் கடந்த 6-ந் தேதி இந்தியாவிற்கு வந்தனர். மீதமுள்ள 11 பேரையும் அங்கிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 10 மாணவ -மாணவிகள் வந்துள்ளனர். ஒரு மாணவர் மட்டும் உக்ரைனில் உள்ளார். அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த மாணவர் தங்கியிருக்கும் இடம் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.