தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பற்றிய செய்தி
புகார் பெட்டி செய்தி எதிரொலி
திருக்கோவிலூர் தாலுகா முருக்கம்பாடி கிராமத்தில் இருந்து கொங்கணாமூர் செல்லும் சாலையை புதிதாக அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு இருந்தது. ஆனால் சாலை பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதுபற்றி ‘தினத்தந்தி’யில் வெளியாகும் புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அங்கு தற்போது புதிய தார் சாலை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
பாரதி, மணலூர்பேட்டை
போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
சிதம்பரம் நகரில் உள்ள நான்கு முக்கிய வீதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே இந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியில் இருந்து சரியான திட்டமிடலுடன் போக்குவரத்தை மாற்றி அமைத்து நெரிசலை தவிர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கமல், சிதம்பரம்
புதிய தார் சாலை வேண்டும்
திண்டிவனம் தாலுகா ஆவணிப்பூர் கிராமத்தில் சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நேர்ந்து வருகிறது. புதிய சாலை அமைக்க கோரி பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த பகுதி மக்களின் நலன் கருதி, மாவட்ட கலெக்டர் இங்கு புதிய சாலை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மோகன்ராஜ் அசோகன், ஆவணிப்பூர்
பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
திட்டக்குடி அருகே உள்ளது ஆலத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதுதொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் மக்கள் திறந்த வெளி பகுதியில் காத்திருந்து தான் பஸ் ஏறி வெளியூர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இந்த நிலை மாறுவதற்கு உடனடியாக பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.
விஜயராஜா, ஆலத்தூர்
கைப்பம்பை சீரமைப்பது அவசியம்
மேல்மலையனூர் அருகே முருகன் தாங்கல் கூட்டு சாலையில் பத்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முன்பு ஒரு கைப்பம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது.
பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த கோவிலின் உட்பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள். தற்போது இந்த கைப்பம்பு பழுதடைந்துள்ளதால் பக்தர்கள் தண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கைப்பம்பை சரிசெய்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூபவி, மேல்மலையனூர்.
கழிப்பறையை சீரமைக்க வலியுறுத்தல்
பிரம்மதேசம் அருகே வேப்பேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1100 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு கழிப்பறை வசதி இருந்தும், சரியான பராமரிப்பு இல்லாததால், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அங்குள்ள தண்ணீர் குழாயும் உடைந்து கிடக்கிறது. எனவே கட்டிடத்தை சீரமைத்து, தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள், வேப்பேரி
ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி
விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. உயிர்பலியும் அவ்வப்போது நேர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாலகிருஷ்ணன், புலவன்குப்பம்