பங்குனி உத்திர தேர்த்திருவிழா

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-03-09 15:57 GMT
பேரூர்

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திர தேர்த்திருவிழா

கோவை அருகே பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு பட்டி விநாயகர் கோவிலில் இருந்து, புற்றுமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, நவதானியங்களை வைத்து முளைப்பாலிகையிடுதல் நடந்தது. 

இதையடுத்து 8 மணிக்கு காலசந்தி பூஜை செய்யப்பட்டு விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடந்தது.

தெப்ப உற்சவம்

இதைத்தொடர்ந்து வேதம், ஆகமம், திருப்பாராயணம் பாடப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் 8 மணிக்கு மேல் அஷ்ட பலி பீடங்களுக்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து வேதம், திருப்பாராயணம் பாடப்பட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. 

இரவு 8 மணிக்கு மேல் சந்திரசேகரர் மற்றும் சவுந்தரவல்லி புறப்பாடாகி கோவிலை சுற்றி திருவீதி உலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 14-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 15-ந் தேதி திருத்தேரோட்டமும், 17-ந் தேதி தெப்ப உற்சவம், 18-ந் தேதி பங்குனி உத்திர தரிசனமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கா.விமலா தலைமையிலான திருப்பணி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்