ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மாணவர்கள்

குஜிலியம்பாறை அருகே மாற்றுப்பாதை இல்லாததால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை மாணவர்கள் கடந்து வருகின்றனர்.

Update: 2022-03-09 15:49 GMT
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே சி.அம்மாபட்டி இந்திரா காலனியில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்திராகாலனிக்கும், சி.அம்மாபட்டிக்கும் இடையே ெரயில்வே தண்டவாள பாதை உள்ளது. இதனால் இந்திரா காலனி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும், குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருவதற்கும் இந்த ெரயில்வே தண்டவாள பாதையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
இதை கருத்தில் கொண்டு மாற்றுப்பாதை அமைத்து தருமாறு கிராம மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை மாற்றுப்பாதை அமைத்து தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கும் முன்பு மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்