பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயிலில் ரூ.5 லட்சத்தில் புதிய ரோப்

பழனி முருகன் கோவில் மின் இழுவை ரெயிலில் ரூ.5 லட்சத்தில் புதிய ரோப் பொருத்தப்பட்டது.

Update: 2022-03-09 15:21 GMT
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை உள்ளது. மேலும் முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் மின்இழுவை ரெயில் மூலம் தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். பழனி மேற்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என 3 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்புகழ் மின்இழுவை ரெயிலில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மின்இழுவை ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த ரோப் தேய்மானம் அடைந்ததால், புதிய ரோப் மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்புகழ் மின்இழுவை ரெயிலில் ரூ.5 லட்சத்தில் புதிய ரோப் பொருத்தப்பட்டது.
இந்த பணி நிறைவு பெற்றதால் நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடத்தி பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று முதல் திருப்புகழ் மின்இழுவை ரெயில் பயன்பாட்டுக்கு வந்தது. முன்னதாக மின்இழுவை ரெயிலுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் சாந்தாராம், நாச்சிமுத்து, பொறியாளர்கள் குமார், மோகன்ராஜ் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு மின்இழுவை ரெயிலில் விரைந்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்