இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல்படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி:
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல்படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
ரோந்து பணி
தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர், ரோந்து கப்பல் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்ற ரோந்து கப்பல் புதன்கிழமை அதிகாலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து வடக்கு பகுதியில், இந்திய கடல் எல்லைக்குள் சந்தேகமான வகையில் ஒரு மீன்பிடி படகு மீன்பிடித்துக் கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர்.
இலங்கை மீனவர்கள்
உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் இலங்கை மீனவர்கள் 5 பேர் இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையை சேர்ந்த 5 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
இன்று தூத்துக்குடி வருகின்றனர்
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் இலங்கை புத்தளம் மாவட்டம் நீர்க்கொழும்பு மற்றும் சில்லா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு அழைத்து வருகின்றனர். அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அவர்களை கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.