அடிப்படை வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
குருவராஜகண்டிகை ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது குருவராஜகண்டிகை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிதண்ணீர் மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை தேவைகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது.
இந்த ஊராட்சியில் போதிய நிதி இருந்தும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக ஊராட்சி நிர்வாகத்தை முறைப்படி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிராம பொதுமக்கள் நேற்று குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினார். அப்போது ஊராட்சியின் அடிப்படை வசதிகளை வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று உடனுக்குடன் நிறைவேற்றப்படும். அடிப்படை பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் தங்களது 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.