திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வருவாய் கோட்டங்களிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-03-09 13:26 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகின்ற 18-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க வருவாய் கோட்ட அளவில் திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடத்திட உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கும் கூட்டங்களில் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும் இக்கூட்டத்தில் வேளாண்மை உழவர்நலத் துறை, தோட்டக்கலை துறை, வருவாய் துறை, மின்சார வாரியம், கூட்டுறவு துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை, பொறியியல் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மற்றும் இதர வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகின்ற 18-ந் தேதியன்று நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அந்தந்த வருவாய்க் கோட்டங்களில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடத்திட வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் உரிய சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்து கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்