தூத்துக்குடியில் அனல் மின்நிலைய என்ஜினீயர் வீட்டில் 49 பவுன் நகை கொள்ளை
தூத்துக்குடியில் அனல்மின்நிலைய என்ஜினீயர் வீட்டு கதவை உடைத்து 49 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அனல்மின்நிலைய என்ஜினீயர் வீட்டு கதவை உடைத்து 49 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
என்ஜினீயர்
தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-2 பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். இவருடைய மகன் சரவணன் (வயது 40). இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 27-ந் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருப்புக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே, உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
49 பவுன் நகை கொள்ளை
அந்த பீரோவில் வைத்து இருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், வளையல், கம்மல் உள்ளிட்ட 49 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி விளக்கு, விநாயகர் சிலை உள்ளிட்ட 270 கிராம் வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவைகளையும் காணவில்லை.
யாரோ மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க-வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து சரவணன், தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த துணிகர கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகைகளை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜினீயர் வீ்ட்டில் 49 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு ஊழியர் வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.