தூத்துக்குடி அருகே ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்
தூத்துக்குடி அருகே திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்து ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆடு திருட முயற்சி
தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்தவர் மந்திரம். இவருடைய மகன் பழனி (வயது 44). இவர் ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டின் அருகே ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென மேய்ந்து கொண்டு இருந்த ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வைத்து தப்பி செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள், மர்ம நபர்கள் 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களை திருடிய ஆட்டுடன் சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அரசடி பனையூரை சேர்ந்த சரவணக்குமார் மகன் கரண்குமார் (25), மறவன்மடம் மேற்கு தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர்பாண்டி (21) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் முறப்பநாடு திருவேங்கபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் சிலம்பரசன் (30) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடி உள்ளனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்து ஆடு திருட முயன்றது தெரியவந்தது. சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து, கரண்குமார், நாகூர் பாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.