கொரோனா தடுப்பு பணியின் போது இறப்பு:கிராம உதவியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி

கொரோனா தடுப்பு பணியின் போது இறப்பு:கிராம உதவியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-03-08 21:29 GMT
சிவகங்கை, 

கொரோனா தொற்று தடுப்பு பணியின் போது உயிரிழந்த கிராம உதவியாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை கலெக்டர் வழங்கினார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம் 

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்ற 302 கோரிக்கை மனுக்கள் பெறபட்டது. இந்த மனுக்கள் மீது உடனடியான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 
மேலும் கூட்டத்தில் 7 பேருக்கு விலையில்லா சலைவைப்பெட்டி மற்றும், 7 பயனானிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் விலையில்லா உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.9,904 மதிப்பீட்டிலான கருவிகளையும், கலெக்டர் வழங்கினார்.

நிதியுதவி

மேலும், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று தடுப்பு பணியின் போது நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிங்கம்புணரி வட்டம் கே.நெடுவயல் கிராமத்தில் கிராம உதவியாளர் பழனி குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவினையும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த திருப்பத்தூர் வட்டம் சோலுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டியன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியையும் கலெக்டர் வழங்கினார். 
மேலும் 14 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டையையும் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்