ஹர்ஷா கொலை வழக்கில் கைதான 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்
சிவமொக்காவில் நடந்த ஹர்ஷா கொலை வழக்கில் கைதான 10 பேருக்கும் நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்தது. இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்
சிவமொக்கா: சிவமொக்காவில் நடந்த ஹர்ஷா கொலை வழக்கில் கைதான 10 பேருக்கும் நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்தது. இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஹர்ஷா கொலை சம்பவம்
சிவமொக்கா (மாவட்டம்) டவுன் சீகேஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள பிரமுகர். இவரை கடந்த மாதம்(பிப்ரவரி) 20-ந் தேதி மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இதுதொடர்பாக தொட்டபேட்டை போலீசார் காசிப் உள்பட 10 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஹர்ஷாவின் கொலை சம்பவத்தால் சிவமொக்காவில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தின்போது வன்முறையும் வெடித்தது. இதனால் சிவமொக்காவில் 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. தற்போது சிவமொக்காவில் நிலைமை சீராகி உள்ளது.
சிறையில் அடைப்பு
இதற்கிடையே ஹர்ஷா கொலை வழக்கில் கைதான 10 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவர்களுக்கான போலீஸ் காவல் கடந்த 7-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் 10 பேரையும் போலீசார் நேற்று சிவமொக்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவர்கள் 10 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தினர். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.
ஆனால் அவற்றை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். இவ்வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.