மேகதாது திட்ட விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க இந்த வாரமே அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும்:முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

மேகதாது திட்ட விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க இந்த வாரமே அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்

Update: 2022-03-08 21:06 GMT
பெங்களூரு:
மேகதாது திட்ட விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க இந்த வாரமே அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

காவிரி நீர் பிரச்சினை

இந்த நிலையில் கர்நாடகம் - தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. 
இதுஒருபுறம் இருக்க காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பணிகளிலும் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. மேலும் மத்திய அரசும் மேகதாது திட்டத்திற்கு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. 

மத்திய அரசு ஏற்பாடு செய்யும்

கடந்த நில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த தென்மாநிலங்கள் மாநாட்டில் மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகம் - தமிழ்நாடு மாநிலங்கள் அமர்ந்து பேசி சுமுக முடிவை எட்ட தயார் என்றால் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார். அவரது இந்த மழுப்பலான பேச்சு இருமாநிலங்களுக்கும் புதிதாக இருந்தது. 

இதற்கிடையே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் சார்பில் மேகதாதுவில் இருந்து பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மேகதாது திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கி உத்தரவிட்டார். 

தமிழகத்திற்கு உரிமை இல்லை

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது, மேகதாது திட்டம் குறித்து குறிப்பிட்டு பேசினார். காங்கிரஸ் நடத்திய பாதயாத்திரை குறித்தும் அவர் எடுத்து கூறினார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்து கூறியதாவது:-
மேகதாது திட்ட அறிக்கை கடந்த 2019-ம் ஆண்டு தான் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அது தற்போது காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

 மேலும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் தேவைப்படுகிறது. அத்துடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. சுற்றுச்சூழல் துறை மற்றும் காவிரி நிர்வாக ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும் திட்ட பணிகள் தொடங்கப்படும். மேகதாது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் இந்த வாரமே கூட்டப்படும். அதில் சட்ட நிபுணர் குழுவும் கலந்து கொள்கிறது. இதில் மேகதாது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும். ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும். நாம் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

சித்தராமையா

முன்னதாக சித்தராமையா பேசும்போது, ‘‘மேகதாது திட்ட பணிகளை தொடங்க வலியுறுத்தி நாங்கள் பாதயாத்திரை நடத்தினோம். அதனால் கர்நாடக அந்த திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை. ஆனால் அரசியல் மற்றும் ஓட்டுகளுக்காக சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி பெற்று விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

சுப்ரீம் கோர்ட்டு மேகதாது திட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதாக காரணம் சொல்கிறது. இதை நான் கண்டிக்கிறேன்’’ என்றார்.

மேலும் செய்திகள்