திற்பரப்பு வலதுகரை கால்வாய் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திற்பரப்பு வலதுகரை கால்வாயில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராததால் கால்வாயை தூர்வாரி தண்ணீர் விட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-03-08 20:54 GMT
அருமனை, 
திற்பரப்பு வலதுகரை கால்வாயில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராததால் கால்வாயை தூர்வாரி தண்ணீர் விட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திற்பரப்பு தடுப்பணை
திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் திற்பரப்பு அருவிக்கு மேல் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு திற்பரப்பு வலதுகரை மற்றும் இடதுகரை கால்வாய் அமைக்கப்பட்டது. திற்பரப்பு வலது கரை கால்வாய் அருமனை, மஞ்சாலுமூடு, முழுக்கோடு, சிதறால், இடைக்கோடு போன்ற பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பாய்ந்து செல்கிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் ெசழித்து வந்தது. அத்துடன் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது.
இந்தநிலையில் திற்பரப்பு வலது கரை கால்வாய் பராமரிப்பு இல்லாததாலும், மழைக்காலங்களில் ஏற்பட்ட உடைப்புகளாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வரவில்லை. 
கழிவுநீர் ஓடையாக மாறுகிறது
 கால்வாயை தூர்வராததால் மண் நிரம்பி ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. பழுதடைந்துள்ள மதகுகளை திறக்க முடியாததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. 
மேலும் வீடுகளில் உள்ள கழிவு நீர் கால்வாயில் திருப்பி விடப்படுவதால் இந்த கால்வாய் கழிவு நீர் ஓடையாக மாறி வருகிறது. 
கால்வாயில் தண்ணீர் வராததால் இதை நம்பி உள்ள குளங்கள் கோடைக்காலங்களில் வறண்டு போய் விடுகின்றன. இதனால் இந்த பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிப்பதற்கும் கால்நடைகளை பராமரிப்பதற்கும் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
எனவே திற்பரப்பு வலது கரை கால்வாய் உடைப்புகளை சீரமைத்து, தூர்வாரி கடை மடை வரை தண்ணீர் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்