விபத்தில் அரசு பஸ் டிரைவர் சாவு
தஞ்சை அருகே நடந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
வல்லம்:-
தஞ்சை அருகே நடந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ்
திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பிரிவு சாலை பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி தஞ்சை-திருச்சி சாலையை கடக்க முயன்றது. அப்போது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக லாரியுடன் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லர் மீது மோதியது. பின்னர் பஸ்சிற்கு முன்னால் மனைவி, மகனுடன் செங்கிப்பட்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்த மனையேறிப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் பஸ் மோதியது.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள பள்ளத்தில் பஸ் பாய்ந்தது.
டிரைவர் சாவு
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பஸ் பயணிகள் 12-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதே போல் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வராஜ் அவருடைய மனைவி பிரதிபா மற்றும் அவர்களுடைய மகன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமைய மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.