என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: 10 பேருக்கு சாகும் வரை சிறை
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது.
மதுரை,
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது.
கோகுல்ராஜ் கொலை
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளம் பகுதியில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைதானார்கள். அமுதரசு என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக போலீஸ் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், திடீரென அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கின் விசாரணையின் திசையை மாற்றும் நோக்கத்தில் அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகத்தான் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் தொடங்கி, சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அப்போது சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததாகவும், பிறழ்சாட்சிகளாக மாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மதுரைக்கு மாற்றம்
எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கு மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதிமணி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதனால் யுவராஜ் உள்பட 15 பேர் விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கோர்ட்டு ஒத்தி வைத்திருந்தது.
அதிகபட்ச தண்டனை
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி, இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் நீதிபதி சம்பத்குமாா் தீர்ப்பளித்தார். 10 பேருக்கான தண்டனை விவரம் 8-ந் தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.
எனவே தண்டனை விவரத்தை எதிர்பார்த்து, நேற்று காலையில் இருந்தே ஏராளமானோர் திரண்டதால் கோர்ட்டு வளாகம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.
பகல் 11 மணி அளவில் இந்த வழக்கின் குற்றவாளிகள் 10 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களிடம், “நீங்கள் இந்த வழக்கில் குற்றவாளிகள். உங்களுக்கான தண்டனை விவரம் தெரிவிக்கப்பட உள்ளது. நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?” என நீதிபதி சம்பத்குமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர்கள், “இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் நிரபராதிகள். எங்களை விடுவிக்க வேண்டும்”் என்றனர்.
பின்னர் கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம், “நீங்கள் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா” என நீதிபதி கேட்டதற்கு, “எனது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான். எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குதண்டனை விதிக்க வேண்டும்” என்றார்.
அரசு தரப்பு வக்கீல் மோகனும், 10 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றார்.
இவர்களின் கருத்துக்களை கேட்டபின், 10 பேருக்கான தண்டனை விவரம் பிற்பகலில் தெரிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
சாகும் வரை சிறை தண்டனை
பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில், தீர்ப்பில் கூறிய தண்டனை விவரத்தை நீதிபதி வாசித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது.
அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள்தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதான சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரையும் விடுதலை செய்வதாக கடந்த சனிக்கிழமை நீதிபதி தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரவேற்கத்தக்கது
இந்த தீர்ப்பு குறித்து அரசு வக்கீல் மோகன் கூறியதாவது:-
கோகுல்ராஜ் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் திட்டமிட்டு அவரை கொடூரமாக கொலை செய்து உள்ளனர். கோகுல்ராஜ் 9 மணி் நேரம் சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். கொலை, வன்கொடுமை, கூட்டுச்சதி, ஆள்கடத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் 10 பேருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதி கேட்டுகண்ணகி போராடிய மதுரையில், பட்டியல் இன வாலிபர் கொலையுண்டதற்கும் உரிய நீதி கிடைத்து இருப்பது வரவேற்கத்தக்கது. விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை கிடைக்கும் வகையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும். 10 பேருக்கான தண்டனை என்பது தூக்குத்தண்டனைக்கு சமமானதாகவே கருதுகிறோம். இவர்கள் தண்டனை அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.