உக்ரைனில் இருந்து கர்நாடகம் திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர அனுமதிப்பது குறித்து ஆலோசனை-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
உக்ரைனில் இருந்து கர்நாடகம் திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்
பெங்களூரு: ரஷியாவின் போரால் உக்ரைனில் இருந்து கர்நாடகம் திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
படிப்பை தொடர அனுமதி
கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர், ரஷியாவின் போர் காரணமாக உக்ரைனில் இருந்து கர்நாடகம் திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதற்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளிக்கையில் கூறியதாவது:-
மருத்துவ கல்வி குறித்த விதிமுறைகளை மத்திய அரசு வகுக்கின்றன. உக்ரைனில் இருந்து கர்நாடக மாணவர்கள் பலர் கர்நாடகம் திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள மாணவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கர்நாடகம் திரும்பியுள்ள அந்த மாணவர்கள் படிப்பை தொடர அனுமதிப்பது குறித்து முதல்-மந்திரி ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் ராஜீவ்காந்தி மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் அனைவரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு மாணவர்கள்
மருத்துவ இடங்களில் 85 சதவீத இடங்கள் கர்நாடகத்தில் இருந்தும், 15 சதவீத இடங்கள் தேசிய கலந்தாய்வு மூலமும் நிரப்பப்படுகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதத்தில் அனைத்து தாலுகாக்களிலும் பயிற்சி மையங்களை தொடங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.முன்னதாக பேசிய யு.டி.காதர், ‘‘கர்நாடகத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கும் மருத்துவ இடம் கிடைக்கவில்லை. அதனால் பி.யூ.சி. முதல் மற்றும் 2-ம் ஆண்டு படிக்க தேவை இல்லை. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றால் போதும் என்ற மனநிலை மாணவர்களிடம் எழுந்துள்ளது.
ஆனால் மாணவர்கள் பி.யூ.சி. படிக்கும்போதே நீட் தேர்வுக்கான பயிற்சியை தொடங்கி விடுகிறார்கள். பி.யூ.சி. படிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நீட் தேர்வு மற்றும் பி.யூ.சி. மதிப்பெண்களை சரிசமமாக கருத வேண்டும். அதன் அடிப்படையில் மருத்துவ இடங்களை ஒதுக்க வேண்டும்’’ என்றார்.