மோட்டார் சைக்கிள்கள் மோதல்-2 வாலிபர்கள் பலி

ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-03-08 20:03 GMT
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் ஜெயக்குமார்(வயது 18), மகள் சஞ்சிதா(15). இவர்கள் இருவரும் உறவினர் ஒருவரை கல்லாத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு, விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் வழியாக கடாரங்கொண்டான் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆலத்திபள்ளம் கிராமத்தை சேர்ந்த பாரி மகன் ரஞ்சித்குமாரும்(28) சலுப்பை கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கவுதமும்(30) மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். புதுச்சாவடி அருகே அவர்கள் வந்தபோது எதிர்பாராதவிதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஜெயக்குமார், கவுதம் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரஞ்சித்குமார், சஞ்சிதா ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ஜெயக்குமார், கவுதம் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்குமார், சஞ்சிதா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்